ஹவாயை அச்சுறுத்திய ‘நோலோ’ புயல்! அவசரநிலை அறிவிப்பு - டிரம்ப் ஒப்புதல்

 
cyclone

 

ஹவாய் தீவுகளை அச்சுறுத்திய சக்திவாய்ந்த ‘நோலோ’ புயலை எதிர்கொள்ள அமெரிக்க அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து ஹவாய்க்கான அவசரநிலை அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.பசிபிக் பெருங்கடலில் உருவான நோலோ புயல், ஹவாயின் பிக் ஐலேண்ட் அருகே நகர்ந்ததால் அங்கு கனமழை, பலத்த காற்று, திடீர் வெள்ளம் மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. புயலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் அவசரநிலை உதவி கோரியிருந்தார்.

இதையடுத்து செப்டம்பர் 25-ம் தேதி ஹவாய்க்கான முன்கூட்டிய அதிபர் அவசரநிலை அறிவிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் ஹவாய் மாநிலத்தின் ஹொனலுலு, ஹவாய், மவுயி மற்றும் கவாய் மாவட்டங்களில் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் உதவி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நோலோ புயல் வலுப்பெற்று வந்த நிலையில், ஹவாயின் பிக் ஐலேண்ட் பகுதியில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. சில பகுதிகளில் 15 முதல் 20 அங்குலம் வரை மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Deluge begins in Hawaii as Hurricane Nolo continues to strengthen | News Channel 3-12

புயலை எதிர்கொள்ள ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 230-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆரம்பகட்டமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சில பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாகனங்களில் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

தற்போதைய நிலவரப்படி நோலோ ஹவாய் தீவுகளை கடந்து மேற்கு-தென்மேற்கு திசையில் விலகிச் செல்கிறது. எனினும் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சில பகுதிகளில் அபாயம் தொடர்வதாக ஹவாய் அவசரகால மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.நோலோ புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஹவாய் நிர்வாகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது.