5 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு தடை நீட்டிப்பு - உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனத் தொடரப்பட்ட பொதுநல வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு ஜூலை 31 வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், பிறப்பிக்கப்பட்டத் தடையை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன.
இத்தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்த தேர்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 151A-இன் கீழ் இந்த இடங்களைக் 'காலியிடங்களாகக்' கருதி உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவது சட்டச் சிக்கல்களையும் குழப்பங்களையும் உருவாக்கும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்தல் வழக்குகளின் இறுதித் தீர்ப்பு வரும் வரை இத்தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையின் அடிப்படையில், நீதிமன்றத்தின் இந்தத் தடை நீட்டிப்பு உத்தரவு வெளியாகியுள்ளது.
