கூட்ட நெரிசலான டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட உயர் நீதிமன்றம் உத்தரவு!
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்கவும், கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் காவலர்களைப் பணியமர்த்தவும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, "விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என அனைத்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" எனத் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதி, "மாநில அரசுக்குப் பெரும் வருவாயைத் தரக்கூடிய மதுபானக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார்.
நுகர்வோர் கூட்டம் அதிகமாகக் காணப்படும் டாஸ்மாக் கடைகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கவும், ஒழுங்கைப் பராமரிக்கவும் காவலர்களைப் பணியமர்த்த உள்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மதுப் பாட்டில்களுக்குக் கூடுதல் தொகை வசூலித்தால், அதுகுறித்து உடனடியாகக் காவல்துறையில் புகாரளித்து வழக்குப் பதிவு செய்யவும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், மனுதாரர் அளித்துள்ள புகார் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
