குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி - ரூ.60,000 இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நான்காவது குழந்தை பிறந்த விவகாரத்தில், தனி நீதிபதியின் உத்தரவை மாற்றியமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரிஹானா என்ற பெண் தொடர்ந்த வழக்கில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால் தனக்கு 4-வது குழந்தை பிறந்துள்ளதாகவும், எனவே ரூ.3 லட்சம் இழப்பீடும் குழந்தையின் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும் எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், மருத்துவ அறிவியல் ரீதியாகவே இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் சில சமயங்களில் தோல்வியடைய வாய்ப்புள்ளது என்றும், கருவுற்றதை அறிந்த பின்னரும் அதனை அகற்ற மறுத்து விட்டதாகவும் வாதிடப்பட்டது.

அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், முந்தைய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், மனுதாரருக்குப் பாதிப்பு மற்றும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு ரூ.60,000 இழப்பீட்டுத் தொகையை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
