1 வாக்கில் வென்ற தவெக எம்.எல்.ஏ.வுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
தவெக ஒரு வாக்கு

சட்டமன்றத் தேர்தலில் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி வெற்றி எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கில், அவர் மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் உரிய பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மிகக் கடுமையான போட்டி நிலவியது: இத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர். பெரியகருப்பன் 83,364 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இந்த வெற்றியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்தார்:

தமிழ்நாட்டில் திருப்பத்தூர் என்ற பெயரில் இரண்டு தொகுதிகள் (திருப்பத்தூர் மாவட்டம் - திருப்பத்தூர் தொகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம் - திருப்பத்தூர் தொகுதி) உள்ளதால், தனக்குச் சாதகமாக அளிக்கப்பட்ட தபால் வாக்கு ஒன்று தவறான தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெரியகருப்பனின் மனுவுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.