ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற தமிழக போக்குவரத்துத் துறையின் உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பு, ஆம்னி பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகளின் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி, மாநில போக்குவரத்துத் துறை ஆணையம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும், அவை சென்னை நகருக்குள் நுழையக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவினால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி, தனியார் பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் இறுதி விசாரணையை மேற்கொண்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன், தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி இந்த உத்தரவில் உள்ள சட்டரீதியான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, ஒரு புதிய பேருந்து முனையம் அமைக்க மாநில போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதலைக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விண்ணப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மட்டும்தான் இதற்கு விண்ணப்பிக்க முடியும். எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கான முறையான ஒப்புதலைக் கோரி, காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன் தான் மாநில போக்குவரத்து ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என நீதிபதி தெளிவுபடுத்தினார்.
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான வழித்தட உரிமங்களை முறைப்படி வழங்கிய பிறகு, அவர்களைக் குறிப்பிட்ட இடத்திற்குள் வரக்கூடாது எனத் தடுக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கட்டாயமாகக் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என மாநில போக்குவரத்து ஆணையம் பிறப்பித்த உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கனவே இந்த வழக்கின் இடைக்கால உத்தரவின் போது, போரூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க ஆம்னி பேருந்துகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. தற்போது ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டு உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னையில் ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல நகரின் முக்கியப் பகுதிகளிலிருந்து இயங்குவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கியுள்ளன. இதனால் தென் மாவட்டப் பயணிகள் மற்றும் பேருந்து நிறுவனங்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.
