மீண்டும் எம்எல்ஏவாகச் செயல்பட இசக்கி சுப்பையா கோரிக்கை - உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு!
அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையா, தேர்தல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ.வாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த கூடுதல் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, பின்னர் தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தார். இதையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கூறிய அவர், தான் அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், தேர்தல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை தன்னை மீண்டும் எம்.எல்.ஏ.வாகத் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இசக்கி சுப்பையாவின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால் கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் மேலும் கவனம் பெற்றுள்ளன.
