குதிரைபேர வழக்கை போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை!
ஆட்சியைக் கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவ்வழக்கை மாநிலப் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளிவராது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், திருவல்லிக்கேணி காவல்துறையினரின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சேதுராஜ், நரேஷ், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய உத்தரவின் மூலம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 11 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
