பிணைக்காலம் முடிந்தும் சரணடையவில்லை... ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!
பிணைக்காலம் முடிந்தும் சரணடையாமல் இருந்து தலைமறைவான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை, போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்றில் வைத்து நேற்று மாலை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2025 டிசம்பர் மாதம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தாக்குதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த சவுக்கு சங்கருக்கு, கடந்த டிசம்பர் 26 முதல் மார்ச் 25ம் தேதி வரை மருத்துவக் காரணங்களுக்காகச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலப் பிணை வழங்கியிருந்தது.

கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் அவரது பிணைக்காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் சிறையில் சரணடையவில்லை. நீதிமன்ற ஆணையை மதிக்காமல் அவர் தலைமறைவாக இருந்ததோடு, "முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்" எனப் போலீசாருக்குச் சவால் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை காவல்துறை அவரை 'தலைமறைவான குற்றவாளி' என நேற்று முன் தினம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
சவுக்கு சங்கர் ஆந்திராவில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். நேற்று மாலை ஒரு விடுதியில் வைத்து அவரைச் சுற்றி வளைத்த போலீசார், முறைப்படி கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னை அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிணை நிபந்தனைகளை மீறியது மற்றும் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கூடுதல் பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
