விஜய்யுடன் கூட்டணிக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை; எடப்பாடியுடன் தான் நெருக்கம் - அமித்ஷா பேட்டி!

 
அமித்ஷா விஜய் அமித்ஷா விஜய்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக வெளியான தகவல்களை மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

விஜய் குறித்து அமித்ஷா பேசுகையில், "விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. அவரைத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி எதையும் நாங்கள் எடுக்கவில்லை."

அமித்ஷா

"விஜய் போன்ற புதிய சக்திகள் கூட்டணிக்கு வருவதால் எங்களது அடிப்படை வாக்கு வங்கியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவரோடு இணைய வேண்டிய அவசியம் தற்போது எங்களுக்கு இல்லை." அதிமுகவுடனான உறவு குறித்துப் பேசிய அமித்ஷா, பழைய கசப்புகளை மறந்து தற்போது இரு கட்சிகளும் மிக நெருக்கமாகப் பணியாற்றி வருவதைச் உறுதிப்படுத்தினார்.

"தமிழகத்தில் அதிமுகவுடனான கூட்டணியே எங்களுக்குப் பெரும் பலத்தைச் சேர்க்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் பாஜக மிகவும் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பலமான அலை வீசுகிறது. இதனைப் பயன்படுத்தி அதிமுக, பாஜக மற்றும் சிறிய பிராந்திய கட்சிகள் உள்ளடக்கிய எங்களது கூட்டணி மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்."

அமித்ஷா

கடந்த சில நாட்களாகவே, நடிகர் விஜய் டெல்லி சென்று பாஜக மேலிடத்தைச் சந்திக்கப் போவதாகத் தகவல்கள் பரவின. ஆனால், விஜய் தரப்பில் இருந்தும், இப்போது பாஜக தரப்பில் இருந்தும் அந்தத் தகவல்கள் மறுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி அமைப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் அமித்ஷா தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.