வாக்குச்சாவடியில் தலைமைக் காவலருக்குக் கழுத்தில் கத்திக்குத்து!

 
கத்திக்குத்து கத்திக்குத்து

பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொறையார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலால் வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர். பூம்புகார் தொகுதி, பொறையார் ஜமாலியா நடுநிலைப் பள்ளியில் உள்ள 324-வது வாக்குச்சாவடியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வந்தது.

கத்திக்குத்து

இங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த குத்தாலம் காவல் நிலையத் தலைமைக் காவலர் விக்னேஷ் என்பவரை, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாகக் குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த தலைமைக் காவலரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாகப் பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமைக் காவலரைத் தாக்கிய நபரைப் பிடித்துப் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன: கைதான நபர் காட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது.

கத்திக்குத்து

இவர் காவல்துறையினர் மீது மிகுந்த வெறுப்பில் இருப்பவர் என்றும், சீருடையில் இருக்கும் போலீசாரைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோலப் போலீஸ்காரர் ஒருவரைப் பிரபாகரன் தாக்கியுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜமாலியா பள்ளி வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருமங்கலத்தைத் தொடர்ந்து, பூம்புகாரிலும் வாக்குச்சாவடிக்கு உள்ளேயே வன்முறைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது தமிழகத் தேர்தல் களத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.