மருத்துவக் காப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு... தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் மெகா அறிவிப்பு!

 
ஸ்டாலின் ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சாமானிய மக்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய சலுகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

காப்பீட்டுத் தொகை உயர்வு: தற்போது நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைக் கட்டண வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

வருமான வரம்பு உயர்வு: இத்திட்டத்தில் சேருவதற்கான ஆண்டு வருமான வரம்பு தற்போதுள்ள ரூ.1.20 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். இதன் மூலம் நடுத்தரக் குடும்பத்தினரும் அரசு வழங்கும் உயர்தர மருத்துவச் சிகிச்சையை இலவசமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு மட்டுமின்றி, பல்வேறு பிரிவினருக்கான மாதாந்திர உதவித்தொகைகளையும் உயர்த்தி வழங்க திமுக வாக்குறுதி அளித்துள்ளது:

முதியோர் உதவித்தொகை: முதியோர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,200-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

புதுமைப் பெண் திட்டம்: கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் நலன்: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படும். இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பீட்டுத் தொகையை உயர்த்துவதுடன், அரசு மருத்துவமனைகளில் உயர்தரச் சிகிச்சைகளை நவீனப்படுத்தவும், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்காக மாநிலம் முழுவதும் டயாலிசிஸ் (Dialysis) மையங்களை இருமடங்காக அதிகரிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.