அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு - தவெக அரசின் 'மக்கள் நலன் காப்பீடு' திட்டம்!

 
மக்கள் நலன் காப்பீடு திட்டம் மருத்துவ இன்சூரன்ஸ் மக்கள் நலன் காப்பீடு திட்டம் மருத்துவ இன்சூரன்ஸ்

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அளித்த முக்கிய வாக்குறுதியான, "அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மருத்துவக் காப்பீடு" வழங்கும் திட்டம், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தவெக தனது தேர்தல் அறிக்கையில் இமாலய காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரத்யேகமாக 'மக்கள் நலன் காப்பீடு' அட்டை வழங்கப்படும்.

முதல்வர் விஜய்

தற்போது நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டங்களைக் காட்டிலும், தவெக-வின் இந்த புதிய திட்டம் பல மடங்கு கூடுதல் பலன்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரணப் பரிசோதனைகள் மட்டுமின்றி, சாமானிய மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத அதிநவீன மற்றும் செலவு மிகுந்த மருத்துவச் சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன:

புற்றுநோய் சிகிச்சைகள், இதய மாற்று மற்றும் அதிநவீன இதய அறுவை சிகிச்சைகள், தொடர் டயாலிசிஸ் தேவைகள், அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விதமான உயர்தர மருத்துவச் சேவைகளும் இந்த ஒரே காப்பீட்டு அட்டையின் மூலம் முற்றிலும் கட்டணமில்லாமலும், ரொக்கமில்லாமலும் பெற வழிவகை செய்யப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

விஜய்

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசின் முதல் இடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.

மக்களுக்கு நேரடியாகப் பலன் தரும் இந்த '25 லட்ச ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தை' பட்ஜெட்டிலேயே அறிவித்து, முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், மருத்துவச் செலவுகளுக்காக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடன் வாங்கும் நிலை முற்றிலும் மாறும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் இந்த பட்ஜெட் அறிவிப்புக்கு இப்போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.