4 வயது சிறுவன் மாரடைப்பால் திடீர் மரணம்... கதறித் துடித்த பெற்றோர்!
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் ஒட்டுமொத்தப் பெற்றோரையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையிலான சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ஜனதா மண்டல தலைவர் அபினந்தனின் 4 வயது மகன் வைஷ்ணவ், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவனுக்குத் திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறிய சிறுவன், தனக்கு நேர்ந்த கடுமையான உடல் உபாதைகள் குறித்துத் தன் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளான்.

ஆரம்பத்தில் அது சாதாரண வயிற்றுப் உபாதையாக இருக்கும் என்று கருதிய பெற்றோர், அவனுக்கு வீட்டிலேயே சில எளிய மருத்துவச் சிகிச்சைகளைச் செய்துள்ளனர். இருப்பினும் சிறுவன் வைஷ்ணவின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் நிலைமை மேலும் மோசமடைந்ததால், பதற்றமடைந்த பெற்றோர் அவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே மாரடைப்பு காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டுத் தங்களது அன்பு மகன் உயிரிழந்ததை அறிந்த பெற்றோர், மருத்துவமனை வளாகத்திலேயே உடலைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கண்ணீர் விட வைத்தது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
