மதுரையிலிருந்து 114 நிமிடங்களில் பெரம்பலூருக்கு பறந்த இதயம் - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி!
மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், பசுமை வழித்தடம் மூலம் வெறும் 114 நிமிடங்களில் பெரம்பலூருக்குக் கொண்டுவரப்பட்டு, நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் முன்வந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகளைத் தானமாக வழங்கினர்.

தானமாகப் பெறப்பட்ட இதயம், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயவியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 43 வயது நபருக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் வரை உள்ள சுமார் 178 கிலோமீட்டர் தூரத்திற்கு, மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி திருச்சி காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து பசுமை வழித்தடத்தை ஏற்படுத்தினர்.

மதுரையிலிருந்து காலை 10:28 மணிக்கு ஆம்புலன்ஸில் புறப்பட்ட இதயம், வெறும் 1 மணி நேரம் 54 நிமிடங்களில் (114 நிமிடங்கள்) அதாவது மதியம் 12:22 மணிக்கு மருத்துவமனையை வந்தடைந்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட இதயம், இருதய மற்றும் மார்பு ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ஆஷிக் நிகமத்துல்லாஹ் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் பயனாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. உறுப்பு தானம் வழங்கிய இளைஞரின் குடும்பத்தினருக்கும், உரிய நேரத்தில் உதவிய காவல்துறையினருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
