ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளில் தீவிரமாகும் வெப்பம்.. .ஐஐடி ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!

 
ஜம்மு காஷ்மீர்

இந்தியாவின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரின் உயரமான மலைப்பகுதிகள், புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக மிகத் தீவிரமான பாதிப்புகளைச் சந்தித்து வருவதாக ஐஐடி காரக்பூர் நடத்திய புதிய அறிவியல் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

"Warming of the High-Mountainous Climate Sensitive Jammu and Kashmir During the Period 1980–2024" என்ற தலைப்பில், 1980 முதல் 2024 வரையிலான 45 ஆண்டுகால வானிலை தரவுகளை ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐஐடி காரக்பூர் ஆராய்ச்சியாளர்களின் இந்த விரிவான ஆய்வில், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான குல்மார்க், பகல்காம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 1°C வரை அதிகரித்துள்ளது.

வெப்பம்

சமவெளிப் பகுதிகளை விட மலைப்பகுதிகளில் தான் வெப்பத்தின் தாக்கம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சில குறிப்பிட்ட மலைசார் பகுதிகளில் இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் 0.6°C வரை எகிறி வருகிறது.

பனிப்பொழிவு குறைந்து வருவதால், சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கும் பனியின் திறன் குறைந்து, இருண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை உறிஞ்சத் தொடங்கியுள்ளது. இது பனிப்பாறைகள் உருகும் வேகத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இமயமலை நதிகளையும், பனி உருகி வரும் நன்னீரையும் மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தத் திடீர் காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்! பொதுமக்கள் அவதி!

வருங்காலங்களில் நதிகளின் நீர்வரத்து தடம் மாறுவதற்கும், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவதற்கும் இது வழிவகுக்கும் என்பதால், இப்பகுதிகளில் காலநிலைத் தற்காப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.