தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை விடத் தயாராக இருக்க அரசு உத்தரவு!
தமிழகத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் 19 மாவட்டங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்குப் பின்வரும் அதிரடி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அந்தந்த வட்டாரப் பேரிடர் மேலாண்மை மையங்களுடன் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் உடனடியாக இணைய வேண்டும். இதன் மூலம் தினசரி வானிலை நிலவரங்களை உடனுக்குடன் கண்காணித்து அறிய வேண்டும்.

வரும் நாட்களில் வெப்பத்தின் தீவிரம் இன்னும் அதிகரித்தால், மாவட்ட நிர்வாகத்தின் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளிகளுக்குத் தற்காலிக விடுமுறை அறிவிக்கத் தலைமை ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். பள்ளிகள் இயங்கும் நாட்களில் மாணவர்களின் உடல்நலனைப் பேணிக் காக்கக் கீழ்வரும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது:
பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தடையின்றிக் சுத்தமான குடிநீர் கிடைப்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் பருகுவதை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

கடுமையான வெயில் காரணமாக மாணவர்கள் வகுப்பறைகளை விட்டு வெளியே மைதானங்களில் விளையாடுவதோ அல்லது உடற்பயிற்சி போன்ற வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு அனுப்பி வைக்கவும், போதிய அளவு தண்ணீர் கொடுத்து அனுப்பவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
