தமிழகம் முழுவதும் நாளை மாலையுடன் ஓய்கிறது அனல் பறக்கும் பிரச்சாரம் !

 
தமிழகம் தேர்தல் தமிழகம் தேர்தல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தங்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தமிழகம்

தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது இறுதிக்கட்ட பிரசாரத்திற்காகச் சென்னையில் முகாமிட்டுள்ளார். சென்னையில் உள்ள முக்கியத் தொகுதிகளில் இன்று தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறார். அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அவர் மேற்கொள்ளும் இந்த அதிரடி பிரசாரம் உடன்பிறப்புகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம்

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நாளை மாலை பிரசாரம் முடிவடைவதைத் தொடர்ந்து, தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் வாக்குப்பதிவு தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.