ஆப்கானிஸ்தான் மீது போர் அறிவித்தது பாகிஸ்தான் - எல்லையில் கடும் மோதல்!

 
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லையில் நிலவி வந்த பதற்றம் தற்போது வெளிப்படையான போராக மாறியுள்ளது. இதன் காரணமாக எல்லையில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்தி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. தற்போது இது முழு அளவிலான போராக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள மசூதிகள், ராணுவத் தளங்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது தலிபான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான 'தெஹ்ரிக்-இ-தலிபான்' தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வந்தது.

குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தான் காபூல்

கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டன. நேற்று இரவு தலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 19 சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் தலிபான் தரப்பு கூறியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 130 தலிபான்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "பாகிஸ்தானின் பொறுமை எல்லை கடந்துவிட்டது. இது ஆப்கானிஸ்தான் மீதான வெளிப்படையான போர்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் 'ஆபரேஷன் கசாப் லில் ஹக்' என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான்

இதற்குப் பதிலடியாக, "பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்தால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்" என்று தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தில் இந்த போர் அறிவிப்பு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.