பிரம்மபுத்திரா கடும் வெள்ளப்பெருக்கு... அசாமில் 50 பேர் பலி!

 
அசாம் வெள்ளம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகப் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினால் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக  25-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் மூழ்கியும் பலியானோரின் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான வீட்டு விலங்குகளும் கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன. வெள்ள பாதிப்பு காரணமாகப் பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், முற்றிலுமாகச் சேதமடைந்தும் உள்ளன.

அசாம் வெள்ளப்பெருக்கு வெள்ளம்

தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து தவிக்கும் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு, அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிரம்மபுத்திரா ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பதால், மாநில மீட்புக் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து வெள்ளத்தில் சிக்கியவர்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.