கடும் பனிமூட்டம்... 30க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்.. பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

 
பனிமூட்டம்

சென்னையில் இன்று 2வது நாளாக கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முடியாமல் 12 க்கும் மேற்பட்ட விமானங்கள், ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

போகி பண்டிகை காரணமாக ஏற்பட்ட புகை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. இதையடுத்து நேற்று விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்நிலையில் 2வது நாளாக இன்று காலையும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

3 விமானங்கள் ரத்து - 30 விமானங்கள் தாமதம்

லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், குவைத்தில் இருந்து சென்னை வந்த குவைத் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானிகள், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், புனேயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 12 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

விமானங்கள் தாமத்தால் பயணிகள் அவதி

அதைப் போல் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன. மேலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான அந்தமான், டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், துபாய், மஸ்கட் உள்ளிட்ட 12 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரையில் பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லை. காலை 7 மணிக்கு மேல் திடீரென சென்னை விமான நிலைய பகுதியில் மூடுபனி ஏற்பட்டுள்ளதால், விமானங்கள் சேவையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதுவரை 30க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமானங்கள் தாமதமாகியுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே டெல்லியில் இருந்து இன்று காலை 5:20 மணிக்கு, சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 10:20 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதேபோல் காலை 11:20 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய 3 விமானங்கள், இன்று டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

From around the web