அமைச்சர் ஷாஜகான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் முற்றுகையிட முயற்சி!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குறித்த அமைச்சர் ஷாஜகானின் சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, சில கட்சி அலுவலகங்களுக்கு சோபா சென்றது உண்மை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான், ஜவாஹிருல்லா மோசடி வழக்கில் தண்டனை பெற்றவர் என்று கூறியிருந்தார்.

அமைச்சரின் இக்கருத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் கட்சியினர் மற்றும் ஜவாஹிருல்லாவின் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைக் கண்டித்து, கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள அமைச்சர் ஷாஜகானின் வீட்டை முற்றுகையிட அவரது ஆதரவாளர்கள் முயன்றனர். இதனையடுத்து, அங்கு அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
