நெல்லை, குமரியில் தொடர் மழை... நிரம்பும் அணைகள்... அருவிகளில் வெள்ளப்பெருக்கு!
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காரணமாக குமரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழை நேற்று காலையிலும் நீடித்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையில் சூரிய வெளிச்சமே தெரியாதபடி வானில் கருமேகங்கள் திரண்டிருந்தன.
பிறகு இடை, இடையே சாரல் மழை பெய்ததால் வேலை விஷயமாக வெளியே சென்றவர்கள் கையில் குடை பிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சென்றனர். பின்னர் 12 மணிக்கு சுமார் 15 நிமிடம் பலத்த மழையாக பெய்தது. எனினும் வெயில் அவ்வப்போது வெளியே தலைகாட்டியது. இந்த சீதோஷ்ண நிலையை பொதுமக்கள் உற்சாகமாக அனுபவித்தனர். அதே சமயத்தில் தொடர் மழைக்கு நேற்று முன்தினம் 2 வீடுகளில் ஒரு பகுதி அளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதம் அடைந்தது.
நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழையில் அதிகபட்சமாக பெருஞ்சாணி பகுதியில் 25.6 மி.மீ. பதிவாகி இருந்தது. இதே போல கொட்டாரம்-3.2, மயிலாடி-4.2, நாகர்கோவில்-10.2, கன்னிமார்-3.2, ஆரல்வாய்மொழி-2.2, பூதப்பாண்டி-15.4, பாலமோர்-11.2, இரணியல்-6.4, அடையாமடை-11, குருந்தன்கோடு-9, கோழிபோர்விளை-6.8, ஆனைகிடங்கு-5.8, களியல்-12.8, குழித்துறை-5.8, புத்தன்அணை-24.2, சுருளகோடு-8.4, திற்பரப்பு-9.8, முள்ளங்கினாவிளை-5.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.
இதே போல அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-16.8, சிற்றார் 1-14.6, சிற்றார் 2-14.2, மாம்பழத்துறையாறு-6.6, முக்கடல்-5.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 519 கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று 839 கனஅடியாக உயர்ந்தது. வினாடிக்கு 309 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 365 கனஅடி தண்ணீரும், வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் வந்த சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் வந்தது.
அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 501 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 510 கனஅடி தண்ணீரும் பாசன கால்வாய்களில் திறக்கப்பட்டது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே மறுகால் பாய்ந்தது. சிற்றார் அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திற்பரப்பு அருவியில் நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்.. சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!