கனமழை... பருவமழை முன்னெச்சரிக்கை - சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
மழைநீர் தேங்குவதைத் தவிர்க்கவும், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்காமல் பாதுகாப்பாகப் பயணம் செய்வதை உறுதி செய்யவும் மாநகராட்சித் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாதவரம் மண்டலம்: வார்டு-25க்குட்பட்ட மேதா நகர் சாலை, தண்டையார்பேட்டை மண்டலம்: வார்டு-35க்குட்பட்ட கே.கே.டி நகர் 3-வது பிரதான சாலை மற்றும் முத்தமிழ் நகர் மேற்கு அவென்யூ சாலை, அம்பத்தூர் மண்டலம்: வார்டு-84க்குட்பட்ட சிட்கோ 7-வது தெரு, கோடம்பாக்கம் மண்டலம்: வார்டு-129க்குட்பட்ட என்.எஸ்.கே லேன், வளசரவாக்கம் மண்டலம்: வார்டு-147க்குட்பட்ட கிருஷ்ணா நகர் 27-வது தெரு. பெருங்குடி மண்டலம் வார்டு-182க்குட்பட்ட நேரு நகர் 1-வது குறுக்கு தெரு, திரு.வி.க 1-வது குறுக்கு தெரு, ஹரிவர்தன் தெரு மற்றும் வார்டு-183க்குட்பட்ட வி.ஜி.பி 1-வது பிரதான சாலை.

மேற்கண்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் சாலைகளில் கண்டறியப்பட்ட பள்ளங்கள் மற்றும் குண்டும் குழியுமான பகுதிகள் அனைத்தும் உடனடியாகத் தார்க்கலவை (Tar) மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு தரம் உயர்த்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ந்து மாநகராட்சி முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
