மீண்டும் கனமழை எச்சரிக்கை.. அக்.21, 22 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்கு முன் விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கைகள் வாபஸ் பெறப்பட்டாலும், வரும் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 21-ம் தேதியன்று நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அக்டோபர் 22-ஆம் தேதியன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜானும் எச்சரித்துள்ளார்.

வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி உள்ளிட்ட நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திறக்கப்பட உள்ள சூழலில், இந்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை தீவிரமாகப் பெய்யும் பட்சத்தில் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர். எனினும், அந்தந்த மாவட்டங்களில் நிலவும் மழையின் தாக்கத்தைப் பொறுத்தே பள்ளி விடுமுறை குறித்த இறுதி முடிவை மாவட்ட நிர்வாகங்கள் தवனித்து அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
