கனமழை எச்சரிக்கை.. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல் - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

 
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து, அங்குள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதி, கடற்கரை சாலை, பகவதி அம்மன் கோயில் மற்றும் நினைவு மண்டபங்கள் போன்ற முக்கியப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திற்பரப்பு அருவி மற்றும் மாவட்டத்தின் இதர நீர்வீழ்ச்சிப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு, அனைத்துச் சுற்றுலா மையங்களும் தற்காலிகமாகப் பூட்டப்பட்டுள்ளன. தொடர் மழையின் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கனமழைக் காலத்துடன் சேர்த்துப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடல் வழக்கத்தை விட மிகவும் சீற்றத்துடன் காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் தொழிலாளர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை எந்தச் சூழலிலும் மீன்படிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான துறைமுகங்களுக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி திற்பரப்பு

மேலும், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஆற்றங்கரைகள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் முழு வீச்சில் இயங்கி வருவதுடன், மழையால் பாதிக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீட்கத் தீயணைப்புத் துறையினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழைக்காலத் துயரங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.