கனமழையின் உக்கிர தாண்டவம்... கேரளாவில் இதுவரை 6 பேர் பரிதாப பலி!
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதோடு, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், வீடுகள் சேதமடைந்தும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த மழைக்காலத் தீவிரத்தால் ஏற்பட்ட வெவ்வேறு விபத்துகளில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மழை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, மாநிலத்தில் மழையின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாகத் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
