விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழை... திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

 
திற்பரப்பு திற்பரப்பு

 

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு மாவட்டம் முழுவதும் விடிய விடிய  கொட்டித்தீர்த்த மழையானது இன்றும் இடைவிடாது நீடிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

திற்பரப்பு

இந்தத் தொடர் கனமழையின் காரணமாக, குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற திற்பரப்பு அருவிப் பகுதியில் அதிகபட்சமாக 68.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அருவியில் வெள்ள நீர் எரிமலை போல் ஆர்ப்பரித்து அபாயக் கட்டத்தைத் தாண்டி கொட்டுகிறது. மேலும் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி ஆகிய அணைப் பகுதிகளிலும் மழை நீடிப்பதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், தாமிரபரணி மற்றும் கோதையாற்றின் கரையோர மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள இந்த அபாயகரமான வெள்ளப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அருவியின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்  தடை விதித்துள்ளது. இதனால் வார இறுதி விடுமுறையைக் கொண்டாட ஆவலோடு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் அருவிப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.