கனமழையால் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து 5 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகப் பல்வேறு இடங்களில் இடைவிடாது மிக பலத்த மழையும் கொட்டி வருகிறது. இந்நிலையில், மும்பையின் மான்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகரில் அமைந்துள்ள 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, நேற்று பெய்த இந்த கடுமையான கனமழையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் திடீரென முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.

நள்ளிரவு நேரத்தில் இந்த கட்டிடம் அருகிலிருந்த குடிசை வீடுகளின் மீது சரிந்து விழுந்ததால், அங்கு தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி வெளியில் வர முடியாமல் தவித்தனர். இக்கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குப் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் நவீன உபகரணங்களுடன் விரைந்து வந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த பகுதியில் மீட்புக்குழுவினர் தங்களின் பணிகளை முழுமையாக முடுக்கி விட்டுள்ளனர். கனமழையால் நள்ளிரவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த இத்துயரச் சம்பவம் ஒட்டுமொத்த மும்பை மாநகரிலும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
