வெளுத்து வாங்கும் கனமழை... வெள்ளப் பெருக்கால் 22,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

 
மழை

குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக் காடாகக் காட்சிளிக்கின்றன. குறிப்பாக தெற்கு குஜராத் பகுதிகளான வல்சாடு, நவ்சாரி, சூரத், அகமதாபாத் மற்றும் தாங் ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் தாழ்வான பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. மழைநீருடன் ஆற்றின் பெருக்கெடுத்த வெள்ளமும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கிப் பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளப் பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் சூழலில், அம்மாநில முதல்வர் புபேந்திர படேல் நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட ஆபத்தான மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து இதுவரை 22,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் சிக்கித் தவித்த 1,200க்கும் மேற்பட்டோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் சேர்த்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் அவசிய மருத்துவ வசதிகளை மாவட்ட நிர்வாகங்கள் முகாம்களில் தடையின்றி வழங்கி வருகின்றன. இந்திய ராணுவம், கடலோரக் காவல் படை மற்றும் விமானப்படை ஆகியவையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் களம் இறக்கப்பட்டுள்ளன.

வானிலை ஆய்வு மையம் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பிரதான சாலைகளில் வெள்ளநீர் பாய்வதாலும், பல இடங்களில் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாலும் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.