கனமழை எதிரொலி.. சதுரகிரி மலையேறி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு தடை!

 
சதுரகிரி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்லவிருந்த பக்தர்களுக்கு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வனத்துறை இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சதுரகிரி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. சதுரகிரி மலைப் பாதைகளில் உள்ள மாங்காட்டேறு, சங்கிலி தீர்த்தம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோயில் செல்லும் வழிகளில் உள்ள பல்வேறு ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாகப் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படும் நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மலையேறும் பாதைகளில் ஓடைகளைக் கடக்கும்போது திடீர் நீர்ப்பெருக்கு ஏற்பட்டால் பக்தர்கள் அடித்துச் செல்லப்பட நேரிடும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளன. அதன்படி, இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்குச் சதுரகிரி மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி

இந்தத் தடையைப் பற்றி முன்கூட்டியே அறியாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோயிலுக்கு வருகை தந்திருந்த ஏராளமான பக்தர்கள், நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டதால் கடுமையான ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மழை நின்ற பின் சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், வனத்துறையின் முறையான அறிவிப்புக்குப் பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.