தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை - நாளை கோவை, நீலகிரியில் கனமழை எச்சரிக்கை!
தமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று (ஜூன் 26) சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், அடுத்த சில நாட்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, வளிமண்டலத்தில் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில், தமிழகக் கடலோரப் பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள். ஆகிய இடங்ளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாளை 27ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் ஜூன் 28ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 29 மற்றும் ஜூன் 30ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது. 30-06-2026: நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். பிற இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38°C - 39°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C - 29°C ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும், ஜூன் 29-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமின்றி, வெப்பநிலை இயல்பு நிலையை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
