குஜராத்தில் கனமழை: வீட்டின் குளியலறையில் பதுங்கிய 7 அடி நீள முதலை!

 
முதலை

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட 7 அடி நீள முதலை ஒன்று, வீட்டின் குளியலறைக்குள் புகுந்து பதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்ததால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பாலாபாய் சவுகான் என்பவரது வீட்டிற்குள் வெள்ள நீரோடு 7 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்துள்ளது. ஆரம்பத்தில் இதனை யாரும் கவனிக்கவில்லை. ஆனால் வீட்டின் வெளியே நாய்கள் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த பாலாபாய், சென்று பார்த்தபோது குளியலறை கதவருகே முதலை பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

முதலை

பாலாபாய் உடனடியாக அளித்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீவிர முயற்சிக்குப் பிறகு குளியலறையில் இருந்த 7 அடி நீள முதலையைப் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். அருகில் உள்ள மட்லஜ் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் வாழும் குளம் ஒன்று உள்ளது. கனமழை வெள்ளம் காரணமாக அக்குளத்தில் இருந்துதான் இந்த முதலை அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதலை மீண்டும் பாதுகாப்பான நீர்நிலையில் கொண்டு போய் விடப்பட்டது.