மயிலாடுதுறையில் கனமழை... கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
சீர்காழி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மோட்டார் மூலம் கூடுதல் செலவு செய்து குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில், கடந்த வாரத்தில்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. எனினும் பல இடங்களில் நெல் கொள்முதல் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

அகணி, கொண்டல், செம்மங்குடி உள்ளிட்ட பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளையும், நெல்மணிகளையும் பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் அடுக்கி வைத்திருந்தனர்.
திடீரெனப் பெய்த கனமழையால் திறந்தவெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததைக் கண்டு விவசாயிகள் கடும் கவலை அடைந்துள்ளனர். எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளைத் தாமதமின்றி உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளும் மழையில் நனைந்துள்ளதால், உள்ளூர் பகுதி கால்நடை வளர்ப்போருக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
