மும்பையில் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்.. பேருந்து, ரயில் போக்குவரத்து முடங்கியது!

 
மும்பை கனமழை

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அதிபலத்த கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மும்பையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் அதிரடி விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மும்பையில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்கனவே மான்குர்த் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிட விபத்துகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நகரின் பெரும்பாலான தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகள் இன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மும்பை கட்டிடம் இடிந்து

மழையினால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள், மரம் விழுதல் அல்லது இதர அவசரக் கால மீட்பு உதவிகளுக்குப் பொதுமக்கள் தங்குதடையின்றித் தொடர்புகொள்ள ஏதுவாக, 1916 என்ற பிரத்யேக அவசரக் கால உதவி எண்ணை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

மும்பையின் கடலோரப் பகுதிகள் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய இடங்களில் மீட்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காகப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 17 பிரத்யேக என்டிஆர்எஃப் குழுக்கள் நவீன மீட்புக் கருவிகள் மற்றும் படகுகளுடன் மும்பையின் பல்வேறு பகுதிகளில் தற்பொழுது முழுத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மழை கனமழை மும்பை

தொடர் கனமழையினால் உள்ளூர் இரயில் சேவைகள் மற்றும் சாலைப் போக்குவரத்துகளில் ஆங்காங்கே தாமதங்கள் ஏற்பட்டுள்ளதால், நிலைமையைக் கண்காணித்துச் சீரமைக்கப் போலீசார் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.