கனமழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - தஞ்சையில் விவசாயிகள் போராட்டம்!

 
நெற்பயிர்கள் பயிர் விவசாயி மழை மூழ்கி

தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவிலான நெற்பயிர்கள் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாகக் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் மெலட்டூர், கோவிந்தநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. வடிகால்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, வயல்வெளிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் மழைநீரில் மூழ்கின. பல வாரங்களாக உழைப்பைக் கொட்டி வளர்த்த நெற்பயிர்கள் இடமே தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பதால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

மழைநீர் வடிய வழியில்லாததாலும், அரசு அதிகாரிகள் யாரும் உடனடியாகக் கள ஆய்வு செய்ய வராததாலும் ஆத்திரமடைந்த மெலட்டூர் பகுதி விவசாயிகள் இன்று மதியம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்: "கடன் வாங்கிப் பயிர் செய்திருந்த நிலையில், ஒட்டுமொத்த நெற்பயிர்களும் அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகமும் வேளாண்மைத் துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை நேரில் பார்வையிட்டுக் கணக்கெடுக்க வேண்டும். பயிர் காப்பீடு மற்றும் அரசின் நஷ்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் போராட்டத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

விவசாயிகளின் போராட்டம் குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மழை நின்றவுடன் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றவும், பயிர் சேத விபரங்களை முறையாகக் கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.