இன்றிரவு தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று இரவு வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், தேனி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
