தமிழகத்தின் இன்றிரவு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
மழை

தமிழகத்தின் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய குறுகிய கால முன்னெச்சரிக்கை அறிக்கையின்படி,  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கணித்துக் கூறப்பட்டுள்ளது. மழை பெய்யும் சமயங்களில் மணிக்குச் சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

கன மழை

குறிப்பாக திண்டுக்கல், மதுரை, நீலகிரி மற்றும் கோவை போன்ற மலைப்பாங்கான மற்றும் தென் மாவட்டங்களில் வசிப்பவர்கள் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலின் போது திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழை விடுமுறை

சென்னையின் சில புறநகர்  பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், குளிர்ந்த காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இந்த இரவு நேர திடீர் மழைப்பொழிவு, கடந்த சில நாட்களாக நிலவி வந்த உக்கினமான சூழ்நிலையை மாற்றி வெப்பத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.