தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது

சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் நேற்றிரவு முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இருப்பினும், உட்புற மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
