தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
வளிமண்டலக் கீழடுக்குக் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காற்றழுத்தத் தாழ்வுப் பாதை: தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை சராசரி கடல் மட்டத்தில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்குப் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
