இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - அக்.8 வரை கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சில உள் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் 8 முக்கிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் பல்வேறு வானிலை அமைப்புகள் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. மேலும், அங்கிருந்து கேரளா - கர்நாடகா கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நீடிக்கிறது. சுமார் 3.1 கி.மீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டலச் சுழற்சியும் நிலைகொண்டுள்ளது.

இந்த வளிமண்டல மாற்றங்களின் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும் பல மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 5 மற்றும் 6ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் வானிலை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
