தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

 
மழை மழை

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் சதம் அடித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கும் என்பதால், வெப்பம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதம் கலந்த தெற்குக் காற்று, தமிழகத்தின் உட்பகுதிகளான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை வழியாகத் தெலங்கானா மற்றும் கர்நாடகாவை நோக்கிப் பயணிக்கிறது.

வெயில் மழை

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தம் மற்றும் உயர் அழுத்தம் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன.

இதன் விளைவாக நேற்று காலை கடலோர மாவட்டங்களிலும், மதியத்திற்குப் பிறகு ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், நேற்று தமிழகத்தின் திருச்சி: 105°F (அதிகபட்சம்), வேலூர், ஈரோடு: 104°F, கரூர், மதுரை, திருப்பத்தூர்: 102°F உள்ளிட்ட நகரங்களில் வெயில் வாட்டி வதைத்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பை விட 2° முதல் 3° செல்சியஸ் வரை அதிகமாகவே பதிவாகியுள்ளது.

மழை

இன்று முதல் மழை பெய்யத் தொடங்குவதால், வறண்ட வானிலை மாறி வெப்பம் தணியத் தொடங்கும். குறிப்பாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.