தொடர் கனமழை... ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹150 ஆகக் கிடுகிடு உயர்வு!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரும் வரத்து பாதியாகச் சரிந்ததால் மதுரை உள்ளிட்ட முக்கியச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை நெல்பேட்டை மற்றும் மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தைகளுக்கு வழக்கமாக தினமும் 2,000 மூட்டைகள் வரை வெங்காயம் வந்து கொண்டிருக்கும். ஆனால், பருவமழை காரணமாகத் தற்போது வரத்து பாதியாகக் குறைந்து வெறும் 900 மூட்டைகள் மட்டுமே சந்தைக்கு வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சின்ன வெங்காயம் ஒரு கிலோ ₹100-ல் இருந்து ₹150 ஆக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் (பல்லாரி) ஒரு கிலோ ₹58-ல் இருந்து ₹76 ஆக அதிகரித்துள்ளது.
தினசரி சமையலுக்கு அத்தியாவசியமான வெங்காயத்தின் இந்த திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் மாதாந்திர சமையல் பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
