கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் நனைந்தபடி குழந்தைகளைக் காத்த ஆசிரியர்... நெகிழ்ச்சி வீடியோ!
ஆசிரியர்கள் வகுப்பறையில் வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் போதிப்பதில்லை, ஆபத்தான தருணங்களில் பெற்ற தாயாகவும் தந்தையாகவும் நின்று மாணவர்களை அரவணைக்கின்றனர். குழந்தைகள் தங்களது பெரும்பாலான நேரத்தைப் பள்ளிகளிலேயே கழிப்பதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆசிரியர்களின் முதன்மையான கடமையாக மாறுகிறது. இக்கட்டான சூழல்களில் ஒரு நல்ல ஆசிரியர் தன் உயிரைப் பற்றியும் யோசிக்காமல் மாணவர்களையே காப்பார் என்பதற்குச் சான்றாக இணையத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று பரவி வருகிறது. நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீ ராமசரண் பள்ளியில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அங்குத் திடீரெனப் பெய்த கனமழையின் காரணமாகப் பள்ளியின் வகுப்பறைக்குள் பெருமளவிலான மழைநீர் வேகமாகப் புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வகுப்பறைக் கூரையின் வழியே மழைநீர் ஊற்றெடுத்துக் கொட்டத் தொடங்கியதால் தண்ணீர் பரவி, வகுப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் பயத்தில் நடுங்கினர். இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கண்டு சிறிதும் பயப்படாத ஆசிரியர், குழந்தைகள் மீது நீர் படாமல் இருக்க அனைவரையும் மேஜைகளுக்கு அடியில் அமருமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் தற்காலிகமாகப் பாய்களைக் கொண்டு குழந்தைகளைப் போர்த்தி மறைத்தும், கூரை நீர் நேரடியாகப் படாதவாறு மேஜைகளைப் பலமாகப் பிடித்துக் கொண்டு நின்றார்.
இந்த முயற்சியில் அந்த ஆசிரியர் மழைநீரில் முழுமையாக நனைந்துபோன போதிலும், அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் மாணவர்களைக் காப்பதிலேயே தீவிரம் காட்டினார். தன் மாணவர்களில் ஒருவருக்குக் கூடச் சிறிய ஆபத்து கூட நேர்ந்துவிடக் கூடாது என்பதில் மட்டுமே அவர் முழு கவனத்துடன் செயல்பட்டார். ஆசிரியரின் இந்த அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வு குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வேகமாகப் பரவி வருகிறது. ஆபத்து நேரத்தில் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் மாணவர்களைக் காத்த இந்த ஆசிரியரின் செயல், ஆசிரியர் என்பவர் இரண்டாவது பெற்றோர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
