கனமழை எச்சரிக்கை... வலுப்பெறும் ‘அக்வான்’ புயல் சென்னை - கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நாளை 'அக்வான்' புயலாக உருவெடுக்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புயல் வருகிற 19-ஆம் தேதி இரவு முதல் 20-ஆம் தேதி அதிகாலைக்குள் சென்னை எண்ணூர் - கடலூர் இடையே கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைகிறது. இது நாளை புயலாகவும், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாகவும் மேலும் வலுப்பெறும்.

வளிமண்டலச் சூழல் காரணமாக, புயல் நகர்ந்து வரும் 18-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தமிழகத்தை நோக்கித் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ள தகவலின்படி, 'அக்வான்' புயலானது வருகிற நவம்பர் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு முதல் நவம்பர் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சென்னை எண்ணூர் மற்றும் கடலூர் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
புயல் காரணமாக வரும் 18, 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் வடதமிழகப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக 19-ஆம் தேதி மிகத் தீவிரமான மழை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் இன்றுக்குள் உடனடியாகக் கரைக்குத் திரும்புமாறு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எத்தகைய அவசர காலச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசக் கடற்கரைப் பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் (DRTs) முடக்கிவிடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
