தமிழ்நாட்டில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை பரவலாகத் தீவிரமடைந்து வருவதையொட்டி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
