ஹாலோவீன் விருந்தில் துண்டிக்கப்பட்ட மனிதக் கை வேடத்தில் பிரபல நடிகை ஹைடி க்ளம்... வியப்பூட்டும் வீடியோ!

 
ஹாலோவீன்

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில், பிரபல மாடலும் நடிகையுமான ஹைடி க்ளம், துண்டிக்கப்பட்ட ராட்சத மனிதக் கை போன்ற தோற்றத்தில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற தனது 25-வது ஆண்டு ஹாலோவீன் விருந்தில் அவர் இந்த வித்தியாசமான வேடத்தில் பங்கேற்றார். ரத்தம் வழிவது போன்ற ஒப்பனை, சிவப்பு நிற நகங்கள், மோதிரங்கள் என நிஜமான மனிதக் கையைப் போன்ற தோற்றத்தில் அவரது ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்காக அவரது முகத்திலும் சிறப்பு ஒப்பனை மற்றும் செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த வேடத்தை உருவாக்க பல மாதங்களாகக் கலைஞர்கள் பணியாற்றியதாகவும், ஆடையை அணிந்து தயாராக சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஆனதாகவும் ஹைடி க்ளம் தெரிவித்துள்ளார். இந்தக் கற்பனைக்கு தனது இடது கைதான் உத்வேகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஹாலோவீன் விழாவில் வித்தியாசமான வேடங்களில் தோன்றி கவனம் ஈர்த்து வரும் ஹைடி க்ளம், கடந்த ஆண்டு மெடுசா வேடத்தில் வந்திருந்தார். இந்த ஆண்டின் மனிதக் கை தோற்றமும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.