இனி 30 நிமிஷத்தில மதுரையிலிருந்து திருச்செந்தூர் போகலாம்... தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்!
மதுரையை மையமாக கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் மிகக் குறைந்த நேரத்தில் தங்களது பயணங்களை எளிதாக மேற்கொள்ள முடியும்.
இந்த சேவை மூலம் மதுரையில் இருந்து 30 நிமிடங்களில் திருச்செந்தூர் மற்றும் ராமேசுவரம் செல்ல முடியும். இதேபோல் கொடைக்கானலுக்கும் அரை மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சென்னைக்கு 1 மணி நேரம் 10 நிமிடங்களிலும், பெங்களூருவுக்கு 1½ மணி நேரத்திலும் செல்லலாம்.
அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ஹெலிகாப்டர் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய ரூ.1,60,000 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 பேர் வரை பயணம் செய்யலாம் என்பதால் வர்த்தகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
