துணி காயவைப்பதில் தகராறு... இளம்பெண் ஹெல்மெட்டால் அடித்தே கொலை !

 
சென்னை

 

 

சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துணி காயவைத்தபோது ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் ஹெல்மெட்டால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் துணி காயவைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நீண்டுகொண்டிருந்த பிரச்சனை திடீரென மோதலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், கையில் வைத்திருந்த தலைகவசத்தால் (ஹெல்மெட்) மஞ்சுளா என்ற பெண்ணின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மேடவாக்கம் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழுமையான விவரங்கள் வெளியாகும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறிய விஷயமாகத் தொடங்கிய தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.