வெயிலைச் சமாளிக்க இதையெல்லாம் சாப்பிடாதீங்க - கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல்!

 
 வெயில்  வெயில்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வரும் நிலையில், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம் என உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்: ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி போன்ற 'ரெட் மீட்' வகைகளில் கொழுப்புச் சத்து அதிகம். இவை செரிமானம் ஆக அதிக ஆற்றல் தேவைப்படுவதால், உடல் வெப்பநிலையை உடனடியாக உயர்த்தும். இதற்குப் பதிலாக மீன் அல்லது நாட்டுக்கோழி போன்றவற்றை அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.

இறைச்சி

காரமான மசாலா உணவுகள்: அதிக காரம் மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக வெப்பத்தை உண்டாக்கும். இது வியர்வையை அதிகப்படுத்தி உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள்: பஜ்ஜி, வடை, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகள் செரிமான மண்டலத்தைப் பாதிப்பதோடு, தோலில் எண்ணெய் பசையை அதிகரித்து கோடைக்காலப் பருக்கள் மற்றும் கட்டிகள் வர வழிவகுக்கும்.

டீ மற்றும் காபி: டீ, காபியில் உள்ள 'காஃபைன்' சிறுநீரை அதிகளவு வெளியேற்றும் தன்மை கொண்டது. இது உடலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி சீக்கிரம் தாகத்தையும் சோர்வையும் உண்டாக்கும்.

பழங்கள்

மது மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள்: குளிர்ச்சியாகத் தெரிந்தாலும், மதுபானங்கள் மற்றும் அதிகச் சர்க்கரை கலந்த சோடா பானங்கள் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஆரோக்கியமான மாற்றுகள்: பானங்கள்: இளநீர், பதநீர், மோர், நன்னாரி சர்பத் மற்றும் வெள்ளரிச் சாறு.

உணவுகள்: பழைய சோறு, தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்.